2027 பெப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் போட்டிகளை இலங்கையிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் அதே காலப்பகுதியில் வேறு ஒரு நாட்டில் நடத்தப்படவுள்ளது. இதில் இந்தியா புதிய போட்டி நடத்தும் நாடாக தெரிவு செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. புதிய போட்டி நடத்தும் நாடு தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ICC நிர்வாக சபைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள அரசாங்க தலையீடே போட்டியை இலங்கையிலிருந்து மாற்றுவதற்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
தற்போது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட Transformation Committee எனப்படும் இடைக்கால நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தக் குழு இலங்கை கிரிக்கெட்டின் அரசியலமைப்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாக மாற்றங்களை முன்னெடுத்து வருகிறது.
அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகங்களை ICC அங்கீகரிக்காத நிலையில், Transformation Committee நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் பிரதிநிதிகள் ICC நிர்வாக சபைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.
இந்த இடமாற்றம் இலங்கை மகளிர் அணிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தப் போட்டியில் ICC தரவரிசையில் முதல் ஆறு இடங்களில் உள்ள அணிகளுக்கு மட்டுமே நேரடி தகுதி வழங்கப்படவுள்ளது. தற்போதைய தரவரிசையில் இலங்கை 7ஆவது இடத்தில் உள்ளது.
தற்போது முதல் ஐந்து இடங்களில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் 6ஆவது இடத்தில் உள்ளன. இலங்கை தகுதி பெறத் தவறினால், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இந்தத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை ஒரு ICC தொடரின் நடத்தும் உரிமையை இழக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். 2023ஆம் ஆண்டிலும் இதே காரணங்களால் 2024 ஆடவர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரின் நடத்தும் உரிமை இலங்கையிடமிருந்து பறிக்கப்பட்டு தென்னாபிரிக்காவுக்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையில், Transformation Committee புதிய இலங்கை கிரிக்கெட் அரசியலமைப்பை தயாரித்துள்ளதாகவும், அது எதிர்வரும் சில வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்றால், 2026ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்த முடியும் என Transformation Committee உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.