Features
நேரத்தை வீணடித்தால் 5 ஓட்டங்கள் அபராதம் – ICC புதிய கிரிக்கெட் விதிகள்
October 03, 2026
09:20 PM
Main Admin
சர்வதேச கிரிக்கெட்டில் நேரத்தை வீணடிப்பதை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) புதிய போட்டி விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2026 ஒக்டோபர் 1ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பமாகும் சர்வதேச தொடர்களுக்கு அமுலுக்கு வரும். ஏற்கனவே நடைபெற்று வரும் தொடர்கள் பழைய விதிமுறைகளின் கீழ் தொடரும்.
புதிய விதிகளின்படி, ஆடவர் கிரிக்கெட்டில் ஒரு துடுப்பாட்ட வீரர் பந்தை எதிர்கொள்ள வேண்டிய நேரத்திற்குள் தயாராகாமல் போட்டியை தாமதப்படுத்தினால், முதல் சந்தர்ப்பத்தில் எச்சரிக்கை வழங்கப்படும். இரண்டாவது சந்தர்ப்பத்தில் இறுதி எச்சரிக்கை வழங்கப்படும். மூன்றாவது மற்றும் அதற்குப் பின்னர் இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் களத்தடுப்பு அணிக்கு 5 தண்டனை ஓட்டங்கள் வழங்கப்படும். தொடர்ச்சியான விதிமீறல்களுக்கு ஒழுக்காற்று விதிகளின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
அடுத்த பந்தை வீசுவதற்கு களத்தடுப்பு அணி மற்றும் பந்துவீச்சாளர் தயாராகும் நேரமே இங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. பந்துவீச்சாளர் தனது ஓட்டத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் துடுப்பாட்ட வீரர் பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
எனினும், ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்த பின்னர் களத்திற்கு வரும் புதிய துடுப்பாட்ட வீரருக்கு தனது முதல் பந்தை எதிர்கொள்ளத் தயாராகுவதற்கு இரண்டு நிமிடங்கள் வழங்கப்படும். அந்த நேரத்திற்குள் தயாராகவில்லை என்றால், நேரம் கடந்ததால் ஆட்டமிழக்கும் நிலை ஏற்படலாம்.
பலநாள் போட்டிகளில் நேரத்தை வீணடித்தமைக்கான எச்சரிக்கைகள் 80 ஓவர்கள் முடிந்த பின்னர் மீண்டும் கணக்கிடப்படும். அதேபோல், அதன் பின்னர் நிறைவடையும் ஒவ்வொரு 80 ஓவர் தொகுதியிலும் எச்சரிக்கை எண்ணிக்கை மீண்டும் ஆரம்பமாகும்.
இதற்கிடையில், மகளிர் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரிக்கெட் பந்துகளின் அளவு மற்றும் எடை தொடர்பாகவும் புதிய குறிப்பிட்ட வரம்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி ஆடவர், மகளிர் மற்றும் இளையோர் கிரிக்கெட்டுக்கு தனித்தனியான பந்து அளவு மற்றும் எடை விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பந்து முழுமையாக நிலைபெற்றுவிட்டதா என்பதை தீர்மானிப்பதில் நடுவர்களுக்கு அதிக சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, பந்து இறுதியாக நிலைபெற்றதாக கருதப்படுவதற்கு அது கட்டாயமாக பந்துவீச்சாளர் அல்லது விக்கெட் காப்பாளரின் கைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஓட்டமெடுக்கும் போது ஆட்டமிழத்தல் அல்லது விக்கெட் காப்பாளரால் ஸ்டம்பிங் செய்வதிலும் புதிய தெளிவுபடுத்தல் கொண்டுவரப்பட்டுள்ளது. பந்தை கையில் வைத்திருக்கும் வீரர் அதனை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பந்தை வெறுமனே தொட்டு விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டும் போதுமானதாக இருக்காது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பகல்நேர டெஸ்ட் போட்டிகளில் மோசமான வெளிச்சத்தால் ஆட்டம் பாதிக்கப்படுவதை குறைக்கும் நோக்கில், இரு அணிகளின் முன் ஒப்புதலுடன் இளஞ்சிவப்பு நிற பந்தை பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், போட்டி ஆரம்பித்த பின்னர் பந்தின் நிறத்தை மாற்ற முடியாது.
மேலும், ஒரு நாளின் இறுதி ஓவரில் விக்கெட் வீழ்ந்ததாலேயே அன்றைய ஆட்டம் தானாக முடிவடையாது. அந்த ஓவர் முழுமையாக முடிவடையாத நிலையில், வானிலை மற்றும் ஆட்ட நிலைமைகள் சாதகமாக இருந்தால் மீதமுள்ள பந்துகளை வீசி முடித்த பின்னரே அன்றைய ஆட்டம் நிறைவடையும்.
இந்த மாற்றங்களின் மூலம் போட்டிகளின்போது ஏற்படும் தேவையற்ற நேர விரயத்தை குறைப்பதுடன், கிரிக்கெட் விதிகளில் காணப்படும் சில குழப்பங்களை நீக்கி விதிமுறைகளை மேலும் தெளிவுபடுத்த ICC நடவடிக்கை எடுத்துள்ளது.