2026 மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் தங்களது பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் பயணத்தை இலங்கை மகளிர் அணி சிறப்பான வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 19.5 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை சார்பில் சிறப்பாக பந்துவீசிய அறிமுக வீராங்கனைகளான மிதாலி அயோத்தியா மற்றும் செதனா விமுக்தி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அயோத்தியா 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், விமுக்தி 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
UAE அணியின் துடுப்பாட்ட வீராங்கனைகள் இலங்கை பந்துவீச்சாளர்களின் அழுத்தத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறினர். அணியின் அதிகபட்ச ஓட்டங்களை அணித்தலைவி Esha Oza 18 ஓட்டங்களுடன் பெற்றார்.
80 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த இலங்கை அணி 7.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியைப் பதிவு செய்தது.
அணித்தலைவி சமரி அதபத்து வெறும் 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை விளாசி இலங்கையின் வெற்றியை இலகுவாக்கினார். அவரது அதிரடி இன்னிங்ஸில் பவுண்டரிகளுடன் ஒரு சிக்ஸரும் இடம்பெற்றது.
இந்த சிக்ஸர் மூலம் சமரி மகளிர் ஆசியக் கிண்ண வரலாற்றில் 500 ஓட்டங்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
தொடக்க வீராங்கனை இமேஷி துலானி அதிரடியாக ஓட்டங்களைச் சேர்த்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சமரி அதபத்து எந்தவித சிக்கலுக்கும் இடமளிக்காமல் இலங்கையை இலகுவான வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன் மூலம் 2024ஆம் ஆண்டு வென்ற தங்களது முதல் ஆசியக் கிண்ண பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் இலங்கையின் முயற்சி வெற்றிகரமான ஆரம்பத்தைப் பெற்றுள்ளது.